சந்தேபென்னூர் புஷ்கரிணி
சந்தேபென்னூர் புஷ்கரிணி (Santhebennur Pushkarini) சந்தேபென்னூர் குண்டா என்வும் உள்ளூரில் அழைக்கப்படும் இது, இந்தியாவின் கர்நாடகாவின் சென்னகிரி வட்டத்திலுள்ள சந்தேபென்னூர் கிராமத்தில் உள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க குளம் ஆகும். [1] இது 16 ஆம் நூற்றாண்டில் உள்ளூர் பாளையக்காரர் கெங்க அனுமந்தப்ப நாயக்கர் என்பவரால் கட்டப்பட்டது. [2]
வரலாறு
[தொகு]கி.பி 16 ஆம் நூற்றாண்டில், கெங்க அனுமந்தப்ப நாயக்கர் தனது குல தெய்வமான இராமனுக்கு இந்தப் பகுதியில் ஒரு கோயிலைக் கட்டினார். அப்போது இந்தப் பகுதியில் புனித குளத்தையும் கட்டினார். [2] குளத்தின் மையத்தில் அமைந்துள்ள வசந்த மண்டபம், பிஜப்பூரின் பாமினி ஆட்சியாளர்களுக்கு எதிராக அனுமந்தப்ப நாயக்கர் பெற்ற வெற்றியின் நினைவாக கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. 17 ஆம் நூற்றாண்டில், பிஜப்பூர் இராணுவம் சந்தேபென்னூர் மீது படையெடுத்தது. பிஜப்பூரின் தளபதியான இரணதுல்லாகான், தனது வீரர்களான பட்டேகான் மற்றும் பரித்கான் ஆகியோருடன் சேர்ந்து குளத்தின் கரையில் பயணிகளுக்கான ஓய்வு இல்லத்தைக் கட்டினார். பின்னர் அப்பகுதியில் ஒரு மசூதியையும் கட்டினார்.
கட்டுமானம்
[தொகு]புஷ்கரிணியின் நீளம் 250 அடி (76 மீ) , அகலம் 240 அடி (73 மீ) மற்றும் ஆழம் 30 அடிக்கு (9.1 மீ) அதிகமாக உள்ளது. பக்கவாட்டில் கிரானைட் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. முதலில் எட்டு கோபுரங்கள் இருந்தன; தற்போது ஆறு மட்டுமே எஞ்சியுள்ளன. [2]
குளத்தின் மையத்தில் வசந்த மண்டபம் உள்ளது, இது கரஞ்சி (நீரூற்று) மண்டபம் என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்திய-அரேபிய கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட ஒரு சமச்சீர் தூண் கோபுரம் ஆகும். இது கிரானைட், செங்கல் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. [3] சுமார் 34 ச.அடி (3.2 மீ2) பரப்பளவைக் கொண்ட இந்த பல-நிலைக் கோபுரத்தின் வடிவமைப்பு, குளத்தின் கரையிலிருந்து பார்க்கும்போது தண்ணீரில் மிதப்பது போல் தோன்றும். மண்டபத்தின் வளைவுகள், பெட்டகங்கள் மற்றும் குவிமாடங்கள் அரபு கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளன. அதே நேரத்தில் அதன் தூண்கள், பிரமிடு கோபுரங்கள் மற்றும் செதுக்கல்கள் இந்திய பாணியில் கட்டப்பட்டுள்ளன. உள்ளூர் மக்களின் கூற்றுப்படி, குளம் நிரம்பியவுடன் தண்ணீர் மண்டபத்தை 10 அடி (3.0 மீ) உயரத்திற்கு மூடும்.
குளத்தை ஒட்டிய பயணிகள் ஓய்வு இல்லம் 150 அடி (46 மீ) நீளமும் 40 அடி (12 மீ) அகலமும் கொண்ட ஒரு விசாலமான கட்டிடமாகக் கட்டப்பட்டுள்ளது. இது கிரானைட் கற்களால் முஸ்லிம் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. கட்டிடத்திற்குள் ஒரு பெரிய, தூண் மண்டபம் இருக்கிறது. இது ஒருவேளை பிரார்த்தனை கூடமாக இருக்கலாம். சில காலமாக, இந்த கட்டிடம் இராணுவக் கடையாகவும் பயன்படுத்தப்பட்டது.